Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Thursday, December 20, 2012

மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்

மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்............



 காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது முதல்வராக இருந்த மர்ஹூம் மவ்லவீ எஸ்.எம்.ஸாஹிப் தம்பி ஆலிம் மறைவுக்குப் பின், அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான கடையநல்லூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. 21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 _____________  _______  _______________

[K-Tic] மவ்லானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத் வஃபாத்; K-Tic விடுக்கும் இரங்கல் அறிக்கை!

 

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றியவரும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத் அவர்கள், வியாழன் (20.12.2012) அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
ஹழ்ரத் அவர்களுக்கு வயது 72. நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர்கள், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த மர்ஹூம் மவ்லவீ எஸ்.எம். ஸாஹிப் தம்பி ஆலிம் மறைவுக்குப் பின், அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
 
அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அவர்களின் சொந்த ஊரான கடையநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (21.12.2012 வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் நடு அய்யாபுரம் ஜமாஅத் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அய்யாபுரம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
ஹழ்ரத் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.
 
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
 
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்கள்.
 
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
 
மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய  ரஹ்மானி அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர்.  இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. நூற்றுக்கணக்கான மணவர்களை ஆலிம்களாக உருவாக்கிய மகத்தான மனிதர். கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.
 
தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.
 
யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
 
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
 
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில் இன்று (வெள்ளிக்கிழமை 21.12.2012) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஹழ்ரத் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது.
 
______________________  ___________________________________      _______________________--
 
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

இரங்கல் செய்தி

தமிழ் நல்லுலகின் தகுதி வாய்ந்த தனிப்பெரும் ஒளி விளக்காய் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீந்தமிழில் வெண்கலக்குரல் ஒலியில் தீன் நெறிப் பறை சாற்றி வந்த பண்புள்ளம் கொண்ட மஹ்லராவின் முதல்வர் காயல் நகர் தந்த கண்ணிய மாமேதை கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் வல்ல இறைவனின் நாட்டப்படி வபாத் ஆனார்கள். அன்னாரின் ஜனாஸா நேற்று வெள்ளிக்கிழமை காலை கடைய நல்லூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக!.

இங்ஙனம்,

மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸூன்னா குவைத் (மிஸ்க்)
__________________    __________     ______
 
 

Sunday, December 9, 2012

அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்

அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்

அதிகாலை ஆண்கள்
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.  வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)  அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.  ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே.
 அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
 ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.
 அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்..பாருங்கள்!
 அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: “படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)
 அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும்வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின்அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா..? அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு, ஷைத்-தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும்?
 ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள்.. உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக்காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையைநினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில்எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.
 அதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன? இத்தொழுகையைவிட்டதால் வங்கியில் நாம் சேமித்த பணம் எவ்வளவு..? இத்தொழுகையை விட்டதால்நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை? இதனை அலட்சியம் செய்ததால்வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன? மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு?எண்ணிப்பார்த்தால் எதுவும் இல்லை. அத்தனையும் சுழியம்!
 ஒருவர் அல்லர், இருவர் அல்லர்.. ஒட்டு மொத்த ஒரு சமூகமே அல்லாஹ்கடமையாக்கிய கட்டாயத் தொழுகைகளில் ஒன்றை அலட்சியம் செய்கின்றது என்றால் அல்லாஹ்வின் வெற்றி எப்படிக் கிடைக்கும் நமக்கு?  நாம் இங்கே பேசுவது இரவுத் தொழுகையைக் குறித்தோ, தஹஜ்ஜுத் தொழுகையைக்குறித்தோ, உபரியான வணக்கங்களைக் குறித்தோ அல்ல. மாறாக அல்லாஹ் நம்மீதுவிதியாக்கிய அதிகாலைத் தொழுகையைக் குறித்து; ஃபர்ள் தொழுகையைக் குறித்துஎன்பதை எண்ணும்போது மனதில் வேதனை அலைகள் எழுகின்றன.
 அண்மையில் இணையதளத்தில் ஒரு பள்ளிவாசல் முஅத்தினின் (பாங்கு சொல்பவர்)வேதனையைப் படிக்க முடிந்தது. அறிஞர்களிடம் அவர் கேட்ட மார்க்க விளக்கத்தைஅதில் வெளியிட்டிருந்தார்கள். அவருடைய கேள்வி இதுதான்: “சிலசமயம் நான்அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்கின்றேன். தொழுகைக்கு யாரும் வருவதில்லை. நான் காத்திருப்பேன். சூரியன் உதித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே இந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டு வேறு பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் நான் ஸுபுஹ் தொழுகையை நிறைவேற்றலாமா?”
 ஸுப்ஹானல்லாஹ்! சமூகத்தின் நிலையைப் பாருங்கள். நல்ல வேளை. இதுஇந்தியாவில் அல்ல. வேறு எங்கிருந்தோ கேட்கப்பட்ட கேள்வி. ஆனாலும், நம்ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் கேள்வி இல்லையா இது? ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி இல்லையா இது?
 நபிகளாரின் வேதனை
 உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள்ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?” என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்: “நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)
 ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன.
 இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவேஎண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மட்டும் இன்றைய கால கட்டத்தில் நம்மிடையேஇருந்திருந்தால் நம்மில் எத்தனை பேர்களை நயவஞ்சகர்களின் பட்டியலில்சேர்த்திருப்பார்களோ என்பதை எண்ணும்போது திகைத்து நிற்கின்றோம்.  இன்ன இடத்தில் அதிகாலையில் வா என்று உங்களுடைய காதலியோ காதலனோ சொன்னால் விழுந்தடித்து ஓட மாட்டீர்களா? ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் தருகின்றேன்; அதிகாலையில் இன்ன இடத்தில் என்னைச் சந்திக்க வேண்டும் என்று எவராவது நம்மிடம் கூறினால் போவோமா மாட்டோமா? அப்படி என்றால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை மட்டும் வேண்டாம் என்று கூறி அலட்சியமாகப் படுக்கையில் படுத்துக் கிடக்கின்றோமே. நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான்? அதிகாலைத் தொழுகையை அலட்சியம் செய்பவர்கள் உண்மையில் மிக மோசமான மனிதர்கள்.
 அண்ணலாரின் அமுத மொழிகள்
 மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)
 “சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும்நுழைய மாட்டார்” (முஸ்லிம்)  “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)
 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: “யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும் எழுதப்படுகின்றார்.”
 அல்லாஹ்வின் விருந்தாளிகள்; அல்லாஹ்வின் தூதுக்குழுவினர் என்பது எவ்வளவு பெரிய சிறப்பு!
 ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்: “எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)
 இந்த ஹதீஸைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகைஎன்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்துவானவர்கள், யா அல்லாஹ்! அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்றோ, ஸுபுஹ்தொழாமல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார் என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள்அல்லாஹ்விடம் கூறினால் நம்மைக் குறித்து அல்லாஹ் என்ன நினைப்பான்?

 அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”  கற்பனை செய்து பாருங்கள்..! இருபது முப்பது ஆண்டுகளாய் ஒருவரின் காதுகளில் தொடர்ந்து ஷைத்தான் சிறுநீர்க் கழிக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட துர்பாக்கியவானாக இருக்க வேண்டும்.  இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனாலும் நம் சமூகத்திற்கு என்ன ஆனதுஎன்றே தெரியவில்லை. நிறைய பேர்களுக்கு இப்படி ஒரு தொழுகை பள்ளிவாசலில்தொழப்படுகின்றது என்ற விவரமே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 யூதப் பெண் அமைச்சரின் பதில்
 நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.
 “அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.”
 அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள். ‘யூதர்களால் நாங்கள்நசுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று’ என்று நாம் இறைவனிடம் இருகைஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம்காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமதுவிண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவுதான்.  காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைச் சற்றுகவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள். புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர். ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம்முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்..? உயிருடனா அல்லதுஉயிரற்றவர்களாகவா..? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப்பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோதெரியவில்லை.
 அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை; பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக் கிடைக்கும்?  அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
 மாற்றத்தின் நேரம் அதிகாலை  உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.  ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)
 ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)  லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)
 ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் : “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)  இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.  ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)  (இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
 பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.  2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
 துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.
 2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
 ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.
 இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
 மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த ஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…? அல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம்அல்லவா? அல்லாஹ் பாதுகாப்பானாக!
 “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?  நாம் செய்ய வேண்டியது என்ன?
  1. தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்) என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல!)  
  2. படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.  
  3. தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.  
  4. நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்  
  5. அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.  
  6. சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்  
  7. கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.  
  8. வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.  
  9. ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.  
  10. தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான்அடங்கியுள்ளது.