Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Tuesday, December 21, 2010

மவ்லானா கலீல் அஹ்மது கீரனூரி ஹழ்ரத் வஃபாத் - இரங்கல் அறிக்கை!

பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தப்லீக் அமைப்பின் அமீருமான மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அ. கலீல் அஹ்மது மன்பயீ கீரனூரி ஹழ்ரத் அவர்கள், முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு வைத்த நிலையில் வியாழன் (16.12.2010) மாலை 5.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஹழ்ரத் அவர்களுக்கு வயது 68. ஒரு மனைவியும், 3 ஆண் மக்களும், இரு பெண் மக்களும் உள்ளனர்.
அன்னாரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை (17.12.2010) பகல் 11.30 மணிக்கு கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹழ்ரத் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.





சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான தமிழகத்து அமீருல் வாயிழீன் (சொற்பொழிவாளர்களின் தலைவர்) மௌலானா கலீல் அஹமது கீரனூரி ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.


அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக அமைத்து 1996 முதல் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையை நடத்தி வந்தார்.


தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள்.


சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று 1960களில் கல்லூரிகளில் பேராசிரியர் பொறுப்பேற்றுப் பணியாற்றியுள்ளார்கள். ஈரோடு தாவூதிய்யா அரபி கல்லூரியிலும், திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியிலும் பிரபல்யமான ஆசானாகத் திகழ்ந்தார்கள். பின்னர் திண்டுக்கல் யூஸூஃபிய்யா அரபி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று இன்று வரை தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் கீரனூரி ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தப்லீக் ஊழியர்களுடன் இணைந்து தப்லீக் ஜமாஅத்தின் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். தப்லீக் இயக்கம் தமிழகத்தில் 1952-ல் பரவத் தொடங்கியது. மாலிக் மௌலானா அவர்களின் பெருந்தொண்டும், ஆன்மீக வழிகாட்டுதலும் பல்லாயிரம் பேரை தப்லீக் இயக்கத்தின்பால் ஈர்த்தது.

ஆரம்ப காலத்தில் ரஹ்மதுல்லாஹ் மௌலானா, உமர் பாலன்பூரி மௌலானா இருவரும் குட்டிக் கதைகள் கூறி, இஸ்லாமிய தத்துவங்களை பாமரரும் புரியும் வண்ணம் பேசுவதில் நிகரற்றவர்கள். அவர்களின் பாணியில் தமிழில் உரையாற்றும் பேராற்றல் கீரனூரி ஹழ்ரத் அவர்களுக்கு இருந்தது. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை உதாரணமாக்கிப் பேசி, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அரிய குணம் அவர்களுக்கு இருந்தது.




உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.



அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக் வருகிறது.


(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலிருந்து மேற்கண்ட தகவல்கள் பெறப்பட்டன).



தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.




யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.



ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.



-----------------------------------



ஹழ்ரத் அவர்கள் குறித்து அதிரை சகோதரர் இப்னு அலிய் தரும் குறிப்பு:



ஹழ்ரத் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். 10 - 15 நிமிடங்கள் தமிழில் தாம் பேசியதை அப்படியே உருதுவில் மொழியாக்கிப் பேசிவிட்டுத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உருதுவில் பேசி, பின்னர் அதிகமாகப் பேசிய உருதுவிற்குத் தமிழில் மொழியாக்கி உரையாற்றும் இவரது திறமையைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவர்களது சகோதரர்கள் இருவர் எங்களூர் மத்ரஸாக்களில் பணியாற்றியுள்ளனர். வசதியானவர். வணிகப் பின்னணியையும் உடையவர். ஆனால், மார்க்கப் பணியை விடவில்லை. வாணவியல் சம்பந்தமாக அரபி மொழியில் நூல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார்
 
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!




உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



குவைத்தில் கடந்த வியாழன் (16.12.2010) மற்றும் வெள்ளிக்கிழமை(17.10.2010)களில் மூன்று இடங்களில் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாக்களில் ஹழ்ரத் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஹழ்ரத் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது.

______________________________________________________

கத்தாரில் கடந்த வெள்ளி கிழமை (17 . 12 . 2010 ) ஜும்மா தொழுகைக்கு பிறகு மன்சூரா - ஜம் ஜம் மஸ்ஜிதில் வைத்து மௌலானா கலீல் அஹ்மது அவர்களுக்காக (மறைமுக ஜனாஸா) தொழுகை நடைபெற்றது பிறகு துஆ செய்யப்பட்டது .

No comments:

Post a Comment